Blogger Widgets
>
Home » » யாழ். ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தலா?

யாழ். ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தலா?

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தலாக உள்ளதா? என்கிற தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை இது.

வே. தவச்செல்வம் என்பவர் இக்கட்டுரையை தாய்நாட்டுக்கு அனுப்பி உள்ளார்.

முகமாலையில் கடந்த வாரம் இடம்பெற்றது என்று சொல்லப்படுகின்ற சம்பவத்தை சுற்றி இவ்வாய்வு அமையப் பெற்று உள்ளது.

“ கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் விடயம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகவும், முக்கியத்துவப்படுத்தப்பட்ட செய்தியாகவும் வெளிவந்திருந்தது. உண்மையில் ஊடகவியலாளர்களுக்கு போர் ஓய்ந்து, இயல்பு நிலை ஏற்பட்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் நெருக்கடிகள் என்பது குறைந்துள்ளது என்றே குறிப்பிட முடியும்.

போர் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் செய்திகளை சேகரித்து துணிச்சலுடன் வெளியிட்ட செய்தியாளர்களை புறக்கணித்து றைற்ஸ் நொவ் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் இப்பயிற்சி நெறிக்காக கொழும்புக்கு அழைத்திருந்தது. இந்நிலையில் இப்பின்னணி ஆராயப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

ஏற்கனவே வன்னியில் இறுதிப் போர் வரை நின்று துன்பங்களை அனுபவித்து வந்த செய்தியாளர்களை முழுமையாக இவ்வமைப்புக்கள் புறம் தள்ளி விட்டு விட்டு பயிற்சி நெறிகளுக்கு அவர்கள் விரும்புகின்ற சிலரை மட்டும் அழைத்துச் செல்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயமல்ல. தற்போது புதிதாக ஊடகவியலாளர் தராகி சிவராமை வைத்து வியாபாரம் செய்கின்ற இவர்கள் சிவராமின் நினைவு மண்டபம் ஒன்றையும் ஊடக மையத்துக்கு அருகில் அமைத்துள்ளனர். சிவராம் உயிரோடு இருந்திருந்தால் இவர்களது செயற்பாட்டைப் பார்த்து ஏங்கி செத்திருப்பார்.



ஏற்கனவே வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த, இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட முக்கிய ஏற்பாட்டாளர்கள் இருவர் அச்சங்கத்தில் இருந்த காலப்பகுதியில், சங்கத்துக்கென வழங்கப்பட்ட கணனிகள் உள்ளிட்ட சில ஊடக அடிப்படை சாதனங்களை இல்லாமல் செய்தனர். இதன் பின்னர் சங்கத்தை குழப்பும் நோக்கில் அதில் இருந்து வெளியேறிபுதிய ஊடக அமைப்பை நிறுவி அதன் ஹீரோக்களாக செயற்பட்டு வருகின்றனர்.

இதை விட வேடிக்கையான விடயம் என்னவென்றால் வன்னியிலே நாங்கள் யுத்த நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த பொழுது வன்னியிலே தவிக்கின்ற எங்களது ஊடகவியலாளர்களுக்கு உதவுங்கள் என்று வெளிநாடுகளில் உள்ள சுனந்த தேச பிரிய போன்றவர்களிடம் பெருமளவு நிதியை சேகரித்த யாழ்ப்பாணத்தில் இருந்த இந்த ஊடகவியலாளர்கள் வன்னியில் இருந்து நாங்கள் திரும்பி வந்த பொழுது எங்களுடன் கதைப்பதற்கே பயந்து நின்றார்கள். மற்றப்படி எங்களுக்கு இவர்களால் எந்தவொரு உதவியும் செய்யப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒரு சில ஊடக நிறுவனங்கள் மனிதாபிமான முறையில் சில உதவிகளை செய்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். ஆனால் எங்களது பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரித்த இவர்கள் எங்களுக்கே அவற்றை வழங்கியதாகக் கூறி கணக்கு முடித்ததாக பின்னர் அறிய முடிந்தது.



இதை விட வேடிக்கையான இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்குமென நினைக்கிறேன். ஊடகவியலாளர் தராகி சிவராமின் நினைவு தினம் அண்மையில் ஐரோப்பிய நாடு ஒன்றில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான பேச்சாளராகவும், பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன். இந்நிகழ்வில் கலந்து உரையாற்றி இருந்தார். இதைப் பார்த்தவுடன் எனக்கே சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை. ஏனென்றால் சிவராம் உயிருடன் இருந்த காலப் பகுதியில் சிவராரை விடுதலைப் புலிகளிடமும், அரச தரப்பிடமும் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தவர் சரவணபவன்.

சிவராம் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு கெடுபிடிகளையும், நெருக்கடிகளையும் கொடுத்த இவர் இன்றைக்கு சிவராமின் அனுதாபி போன்று நாடகம் ஆடுவது வேடிக்கையாக உள்ளது. சிவராமின் நினைவு தினத்தில் கலந்து கொண்டு பங்கேற்கக் கூடிய ஒரே தகுதி கூட்டமைப்பில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே உள்ளது. ஏனென்றால் கூட்டமைப்பில் செல்வம் அடைக்கலநாதன் மட்டுமே சிவராமுக்கு அந்தரமான நெருக்கடியான கால கட்டங்களில் பண உதவியில் இருந்து வேறு அரசியல் ரீதியான நெருக்கடிகளின் போதும் உதவி வந்தார்.

ஆனால் சிவராம் இறக்கின்ற வரைக்கும் தொல்லைகளையே கொடுத்த சரவணபவன் இன்றைக்கு சிவராமின் நினைவு தினத்தில் என்ன தகுதியுடன் போய் நின்று உரையாற்றினார்? என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா?





எனது பேனாவுக்கு சில காலமாக ஓய்வு கொடுத்திருந்த நான் இவர்களின் கொடுமைகளை சகிக்க முடியாமலே இப்பொழுது பேனா முனையை உரச ஆரம்பித்துள்ளேன். கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய வவுனியா சம்பவம் பற்றி மேலோட்டமாக தொட்டுச் செல்வது பொருத்தமானதாக இருக்கும். இராணுவ நெருக்கடிகள், இராணுவ கெடுபிடிகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் நின்று செய்தி சேகரித்து உள்ளூர் ஊடகங்கள் முதல சர்வதேச ஊடகங்கள் வரை வெளிப்படுத்தி வந்த காலப்பகுதிகளே உண்மையில் இராணுவ நெருக்கடியான காலப் பகுதிகள் ஆகும். இப்போது போர் ஓய்ந்து ஓரளவுக்கு இயல்பு நிலை ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடிகள் பெருமளவில் குறைந்துள்ளது. என்றே சொல்ல முடியும்.

ஊடகவியலாளர்களை சுடுகின்ற செயற்பாடுகள் முற்றுமுழுதாக நின்று போய்விட்டது. சுதந்திரமாக ஓரளவுக்கு செயற்பட முடிகின்றது. இந்நிலையில் இன்று ஊடகவியலாளர்கள் சிறிய விடயங்களை பெரிதுபடுத்தி ஹீரோக்களாக அவர்களை காட்ட முற்படுவது வேடிக்கையாக உள்ளது.

கொழும்பில் உள்ள ஊடகப் பயிற்சி ஒன்றில் இவர்கள் கலந்து கொள்ளச் சென்ற பொழுது இவ்வாகனத்தின் சாரதியின் ஆசனத்தின் கீழ் கஞ்சா இருந்ததாக பொலிஸார் கூறி இவர்களை கைது செய்திருந்தார்கள். ஊடகவியலாளர்களாக இருந்தாலென்ன நாட்டின் அதி உயர் பீடத்தில் இருந்தால் என்ன பிழை செய்தால் தண்டிக்க வேண்டியது அல்லது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிஸாரின் கடமைதான். பொஸாசாரின் சட்ட அமுலாக்கத்தை தடை செய்யவோ அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்தவோ எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அருகதை கிடையாது. ஊடகவியலாளர்கள் அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் அது தொடர்பில் முறையீடு செய்யலாம்.

எடுத்த எடுப்பில் சாரதி கஞ்சா கொண்டு வரவில்லை, இராணுவமே அதை வைத்தது என்று குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. துணிச்சலுடன் வீதியை மறித்து போராடிய ஊடகவியலாளர்கள் ஏன் இராணுவம் கஞ்சா வைத்த பொழுது அதை நேரடியாக படமெடுக்க முடியாமல் போனது? அல்லது வாகனச் சாரதி அதைக் கொண்டு வந்திருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? சட்டத்தின் வேலையை அதை அமுலாக்குபவர்களே செய்ய முடியும். இதில் ஊடகவியலாளர்கள் தலையிடவோ அல்லது நெருக்கடிகளைக் கொடுக்கவோ நாட்டின் சட்டம் இடம் கொடுக்காது. கெடுபிடிகளுடன் நெருக்கடிகளின் மத்தியில் செய்தி சேகரித்து வெளியிட்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது ஓரளவுக்கு சுதந்திரமான செயற்பாட்டில் ஈடுபட முடிகிறது. சில சில சம்பவங்கள் நடக்கின்ற போதிலும் அவை பாரதூரமான உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்ற அளவுக்கு எல்லை மீறி செல்லவில்லை.





வேடிக்கையான இன்னொரு விடயம் சம்பவம் இடம்பெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு. இது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். இக்குற்றச்சாட்டு ஓரளவுக்கு ஏற்புடையதாகவும் உள்ளது. அதாவது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவரை வன்னியின் கதாநாயகனாக வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் அவரின் செயற்பாடுகள் ஏற்புடையதான செயற்பாடுகளாக ஊடகவியலாளன் என்கிற முறையில் எனக்குத் தெரியவில்லை.

வெளியில் ஒரு முகத்தையும், அலுவலகத்துக்குள் இன்னொரு முகத்தையும் வெளிப்படுத்துபவரே சிவசக்தி ஆனந்தன். இவரின் வீட்டில் ஒரு தடவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடிய போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற பொழுது அவர் எங்களுடன் நடந்து கொண்ட விதம் இவரும் ஒரு மக்கள் பிரதிநிதியா? என்ற கேள்வியை மனதில் ஏற்படுத்தியது. இதை விட இவரின் தலைவராக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை வன்னி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முதன்முதலாக சந்திப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்பொழுதும் ஞாபகத்தில் உள்ளது.

“முள்ளிவாய்க்கால் கடைசி வரைக்கும் புலிகளோடு நின்று குரல் கொடுத்த உங்களை ஏன் இராணுவம் சிறையில் போடாமல் வெளியில் விட்டிருக்கிறார்கள்? உங்களைப் போன்றவர்களை உள்ளே போட்டு விசாரிக்காமல் விடுவது தவறானதாகும்? ”



இவ்வாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியபோது நான் அவரிடம் கதைக்கச் சென்ற விடயத்தையும் கதைக்காமல் வெளியேறிவிட்டேன். இவ்வாறு உள்ளொன்றும், புறம் ஒன்றுமாக ஒரு சிலர் வேடம் போட்டு அரசியல் நாடகம் ஆடுகின்றார்கள். ஒட்டு மொத்தத்தில் மக்களுக்கான எங்களது ஊடகப் பணியை நெருக்கடியான காலப் பகுதியில் திருப்தியாக மேற்கொண்ட ஆத்ம திருப்தி ஒன்று ஆறுதலை அளிக்கின்றது. ஆனால் தற்போது புதிதாக முளைத்திருக்கும் ஊடக ஜாம்பவான்கள் ஏற்கனவே மோசடியில் ஈடுபட்ட ஊடகக் கும்பல்களுடன் இணைந்து செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

ஊடகப் பயிற்சிகளை நடத்துபவர்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள எல்லோரையும் பரந்து பட்ட அளவில் அரவணைத்துச் செல்வதே பொருத்தமானதாக இருக்கும். தற்போது ஊடகவியலாளர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற செய்தி எந்தளவு தூரம் பொருத்தமானது? என்பது கேள்விக்குறிதான். ”

Recent Post